ஷகிப் அல்-ஹசன், மஹமதுல்லா ஆகியோரின் அதிரடி சதங்களின் உதவியுடன் பங்களாதேஷ் அணி, முன்னாள் சாம்பியன் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து வெளியேற்றியது.
http://shihabmalar.blogspot.com/

சாம்பியன்ஸ் கிண்ணம்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 8ஆவது சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இதில் கார்டிப்பில் நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் நியூசிலாந்து- பங்களாதேஷ் அணிகள் தங்களின் இறுதி லீக்கில் மோதின. மழை காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது என்றாலும் ஓவர் குறைக்கப்படவில்லை.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் லுக் ரோஞ்ச் (16 ஓட்டங்கள்), மார்ட்டின் குப்தில் (33 ஓட்டங்கள்) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 
இதன் பின்னர்  கனே வில்லியம்சனும், ரோஸ் டெய்லரும் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தினர். 
ஒரு கட்டத்தில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 152 ஓட்டங்களை (29.4 ஓவர்) எடுத்திருந்ததை பார்த்த போது அந்த அணி 300 ஓட்டங்களை நெருங்கும் போல் தோன்றியது. 
அரைசதம் விளாசிய வில்லியம்சன், சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
நியூசிலாந்து 265 ஓட்டங்கள்
நியூசிலாந்தின் முதுகெலும்பாக விளங்கிய இந்த ஜோடி துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட்டில் பிரிந்தது. வில்லியம்சன் 57 ஓட்டங்களுடனும் (69 பந்து, 5 பவுண்டரி), ரோஸ் டெய்லர் 63 ஓட்டங்களுடனும்  (82 பந்து, 6 பவுண்டரி) ஆட்டம் இழந்தனர். 
இதன் பிறகு ஓட்டவேகம் சற்று தளர்ந்து போனது. நீல் புரூம் (36 ஓட்டங்கள்), கொரி ஹெண்டர்சன் (0), ஜேம்ஸ் நீஷம் (23 ஓட்டங்கள்), ஹெடம் மில்னே (7 ஓட்டங்கள்) ஆகியோர் சீரான இடைவெளியில் வெளியேறினர்.
50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 265 ஓட்டங்களை பெற்றது.
இறுதி 10 ஓவர்களில் நியூசிலாந்து 62 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. நடப்பு தொடரில் இறுதி 10 ஓவர்களில் குறைந்த ஓட்டங்களை எடுத்த அணி நியூசிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.
ஷகிப், மஹமதுல்லா அதிரடி சதம்
 266 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்களுக்குள் தமிம் இக்பால் (0), சபிர் ரகுமான் (8 ஓட்டங்கள்), சவுமியா சர்கார் (3 ஓட்டங்கள்), முஷ்பிகுர் ரஹிம் (14 ஓட்டங்கள்) ஆகியோரின் விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.
 இந்நிலையில் ஷகிப் அல்-ஹசனும், மஹமதுல்லாவும் கைகோர்த்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். 
நிலைத்து நின்று மிரட்டிய இந்த கூட்டணி நியூசிலாந்தின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டது.
ஷகிப் அல்-ஹசன் 7-வது சதத்தை எட்டினார்.
சாதனை
சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஷகிப்-மக்முதுல்லா ஜோடி 5ஆவது விக்கெட்டுக்கு 224 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று சாதனை படைத்தது. 
பங்களாதேஷ் ஜோடி ஒன்று இணைப்பாட்டமாக  200 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
வெற்றியை நெருங்கிய போது ஷகிப் அல்-ஹசன் 114 ஓட்டங்களுடன்  (115 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் மஹமதுல்லா (102 ஓட்டங்கள், 8 பவுண்டரி, 2 சிக்சர்) தனது 3ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
பங்களாதேஷ் அணி 47.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 268 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
இதன் மூலம் 3 புள்ளியுடன் பங்களாதேஷ் அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. 
அவுஸ்திரேலியா-இங்கிலாந்து ஆட்டத்தின் முடிவை பொறுத்து பங்களாதேஷின் அரைஇறுதி வாய்ப்பு தெரியவரும். 
அதாவது அவுஸ்திரேலிய அணி தோற்றால் பங்களாதேஷ் அணியின் அரைஇறுதி கனவு நனவாகும். 
இதேவேளை நியூசிலாந்து முதல்அணியாக போட்டியை விட்டு வெளியேறியது.