இலங்கையின் பந்து வீச்சில் சிக்கி சின்னாபின்னமாகியது இந்தியா : வெற்றி இலக்கு 113
இலங்கைக்கு எதிரான முதலாவது போட்டியில் இலங்கை அணியின் அபார பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது சிக்கி சின்னாபின்னமாகிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று பகலிரவுப் போட்டியாக இந்தியாவின் தர்மசாலாவில் இடம்பெற்று வருகின்றது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் திஸர பெரேரா முதலில் பந்து வீசத் தீர்மானித்தார்.
அதன்படி முதலில் பந்துவீச களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் துடுப்பாட்ட பலத்தை கதிகலங்க வைத்தது.
ஒரு நேரத்தில் இந்திய அணியை குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்குள் கட்டுப்படுத்தும் நிலைமையில் இலங்கை அணி இருந்தது.
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சுக்கு தடுமாறிய இந்திய வீரர்கள், ஆரம்பம் முதல் வீர்கள் மைதானத்திற்குள் வருவதும் போவதுமாக இருந்தனர்.
இந்திய அணியின் முதலாவது விக்கெட் ஓட்டமெதனையும் பெறாத நிலையில் ( தவான் 0 ) சரிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது விக்கெட் 2 ஓட்டங்களைப் பெற்றபோதும் (ரோஹித் சர்மா 2 ) 3 ஆவது விக்கெட் 8 ஓட்டங்களைப் பெற்றபோதும் ( டினேஸ் கார்த்திக் 0 ) 4 விக்கெட் 16 ஓட்டங்களைப் பெற்றபோதும் ( பாண்டியா 2 ) 5 விக்கெட் 16 ஓட்டங்களைப் பெற்றபோதும் ( ஐயர் 9 ) 6 விக்கெட் 28 ஒட்டங்களைப் பெற்றபோதும் ( ஹார்திக் பாண்டியா 10 ) 7 விக்கெட் 29 ஓட்டங்களைப் பெற்றபோதும் ( புவனேஸ்வர் குமார் 0 ) சரிக்கப்பட்டன.
இதையடுத்து டோனியுடன் 8 விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த குல்தீப் யாதேவ் நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியதுடன் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினார்.
இந்நிலையில் இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர்களும் சளைத்தவர்கள் இல்லையென்பதை வெளிப்படுத்திய இலங்கையின் இளம் சுழற்பந்துவீச்சாளரான அகில தனஞ்சய 8 ஆவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்தை முறியடித்தார்.
இந்திய அணியின் 8 விக்கெட் 70 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ( யாதவ் 19 ) வீழ்த்தப்பட்டது. 9 ஆவது விக்கெட் 87 (பும்ரா 0 ) ஓட்டங்களைப் பெற்றிருந்த போது வீழ்த்தப்பட்டது. இறுதி விக்கெட் 112 (டோனி 65 ) ஓட்டங்களைப்பெற்றிருந்தபோது பறிக்கப்பட்டது.
இந்திய அணியில் மகேந்திரசிங் டோனியைதவிர எவரும் பெரிதாக துடுப்பாட்டத்தில் சோபிக்கவில்லை.
67 ஆவது அரைச்சத்தைப்பூர்தி செய்த அனுபவவீரர் மகேந்திரசிங் டோனி 65 ஓட்டங்களைப்பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசிய சுரங்க லக்மால் 4 ஓட்டமற்ற ஓவர்களை வீசியதுடன் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளையும் அஞ்சலோ மெத்தியூஸ் , திஸர பெரேரா , தனஞ்சய டி சில்வா மற்றும் பத்திரண ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இறுதியில் இந்திய அணி 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டது
இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமானால் 50 ஓவர்களில் 113 ஓட்டங்களைப் பெறவேணடும். பொருத்திருந்து பார்ப்போம் போட்டி எவ்வாறு அமையப்போகின்றதென.
கருத்துகள் இல்லை: